×

குடிபோதைக்கு அடிமையானவர்கள் 1.5 கோடி பேர் 17 ஆண்களுக்கு ஒரு பெண் மது அருந்தும் அவலம்: எங்கயுமில்ல... தமிழகத்தில்தான் இந்த கொடுமை... ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

தமிழகத்தில்  சுதந்திர காலத்திற்கு முன்பே மது விற்பனை நடந்துள்ளது. 1930ம் ஆண்டு  இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மகாத்மா காந்தி  அறிவித்தார். சாராயம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டங்களின் விளைவாக  அன்றைய காலக்கட்டத்தில் 9 ஆயிரம் சாராயக்கடைகளை ஏலம் எடுக்க ஆள் இல்லாத  நிலை உருவானது. இதனால் 6 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டது. காந்தி  தொடங்கி வைத்த மதுவிலக்கு போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது  குடிப்பவர்களை புறக்கணிக்கும் நிகழ்வுகளும் நடந்தது. அன்றைய கால கட்டத்தில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு  தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து முன்னாள் முதல்வர்  கருணாநிதி 1973ம் ஆண்டு ஜூலை 30ம்தேதி கள்ளுக்கடைகளும், 1974ம் ஆண்டு  செப்டம்பர் 1ம் தேதி சாராயக்கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார்.  அதன்படி மதுவிலக்கு அவரது ஆட்சி காலத்திலேயே அமலுக்கு  வந்துவிட்டது.

பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபிறகும், மதுவிலக்கை  அமல் படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நடைமுறைப்படுத்துவதில்  பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. அவற்றை எதிர்கொள்ள பல்வேறு  சட்டத்திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. அதே நேரத்தில் கள்ளச்சாராயச்சாவுகள்  அதிகரித்தன. இந்த சூழலில் எம்ஜிஆர், 1981ம் ஆண்டு மே 1ம் தேதி மீண்டும்  கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை திறக்க உத்தரவிட்டார். கள்ளுக்கடைகளும்,  சாராயக்கடைகளும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது.  இந்நிலையில் 2003ம் ஆண்டு முதல்  டாஸ்மாக் வழியாக அரசே மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. அரசு மது  விற்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் டாஸ்மாக் மது விற்பனைக்காக  சென்னை,கோவை, மதுரை, திருச்சி, சேலம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டது. இப்போது 33 வருவாய் மாவட்டங்களுக்கும் ஒரு மேலாளர் என நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தற்போது 5,152 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. 41 டாஸ்மாக் சேமிப்பு கிடங்குகளும் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அயல்நாட்டு  மதுபானங்களை விற்பனை செய்யும் 165 எப்எல் வகை கடைகள் உள்ளன. சாதாரண  நாட்களில் 80 முதல் 90 கோடி வருவாயும், விழாக்காலங்களில் 120 முதல் 180 கோடி வருவாயும் டாஸ்மாக் மதுக்கடைகளால் கிடைக்கிறது. ஆண்டு வருமானம் 31 ஆயிரம் முதல் 32 ஆயிரம் கோடியாக உள்ளது. மாதந்தோறும் சராசரியாக 50  லட்சம் பெட்டி மது வகைகள், 20 லட்சம் பெட்டி பீர் வகைகளும்  விற்பனையாகின்றன. கடந்த  2003ல் ல் 3,639 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், தற்போது (2019) 30 ஆயிரம் கோடியாக  உயர்ந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் 10  மடங்கு  உயர்ந்துள்ளது. 2003-04ம் ஆண்டு ₹3,639 கோடியாக இருந்த டாஸ்மாக்  வருமானம், 2010-11ம் ஆண்டில் 14,965 கோடியாக இருந்தது. 2015-16ம் ஆண்டில் 25,845 கோடி என படிப்படியாக உயர்ந்த டாஸ்மாக் வருமானம், தற்போது ₹30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. கடந்த  17 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ள போதிலும், கடைகளின்  எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.2003ம் ஆண்டில்  மொத்தம் 8,426 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில்,தற்போது 5,152 ஆக  உள்ளது.இவற்றில் 1872 கடைகள் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன என்பது  லேட்டஸ்ட் நிலவரம்.

தமிழகத்தை பொறுத்த வரை 10 வயதிலிருந்து 70 வயது  வரையிலான நபர்கள் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாக ஆய்வில்  தெரியவந்துள்ளது. மத்திய அரசின் சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல்  துறை கடந்த 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி,தமிழகத்தில் சுமார் 1.5 கோடி  பேர்,  மது பழக்கத்தில் இருப்பதாகவும்,அவர்களில் 37 லட்சம் பேருக்கு  மதுபோதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான உதவி தேவைப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மது குடிப்பவர்களில்,17  ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் மது அருந்துவதாகவும் புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன.மதுவால் இன்று குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன.கூலி  வேலைக்கு செல்பவர்கள் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் தொகையை  மதுவுக்காக செலவு செய்கின்றனர். இதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம்  இல்லாமல் இன்றும் பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. அவர்களின்  குழந்தைகளை கூட பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  குடியால் இளம் வயது விதவைகள் அதிகரித்து வருகின்றனர்.

இன்னும் சிலர்,தான் நினைப்பவர்களை தீர்த்துக்கட்ட,அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை  கொடுத்து கொலை செய்கின்றனர். மது குடித்துவிட்டு வாகனம்  ஓட்டும் போது,நிலை தடுமாறி விபத்துகள்  நடப்பது அதிகரித்து வருகிறது. மது  குடித்துவிட்டு ஒருவர் வாகனத்தை ஓட்டுவதால்,அது மோதும் போது மதுப்பழக்கம்  இல்லாதவர்கள் உயிரிழக்கும் அவலங்களும் தொடர்கிறது. இப்படி தொடரும் கொடுமைகளுக்கு மத்தியில் தமிழகத்தில் பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.இதற்காக சசிபெருமாள் போன்ற தியாகிகள் உயிரைக்  கொடுத்தும் பலனின்றி போனது.பூரண மதுவிலக்கு என்பது உடனடி சாத்தியமில்லை, படிப்படியாக அது செயல்பாட்டுக்கு வரும் என்பது அரசின் விளக்கம். அதே நேரத்தில் வாழ்வின் அர்த்தம் உணர்ந்து, மது அருந்துவதை அனைவரும் தவிர்த்தால் விளக்கங்களுக்கும்,வியூகங்களுக்கும் இடமேயில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

15 டூ 24 வயதினருக்கு மதுப்பழக்கம் அதிகம்
மதுவை விரும்பி குடிப்பதில்  15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். வரம்பு மீறி இளம் வயதில் மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். கடைசி வரையிலும் அதனை தொடர்ந்து மனதாலும்,உடலாலும் பாதிக்கப்படுகின்றனர்.ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்த மனிதர்களாக இவர்கள் உருவெடுத்து, உயிர் துறக்கும் நிலைக்கும் ஆளாகின்றனர் என்பது ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்.

ஜாலிக்காக மதுமாணவிகள் பகீர்
கடந்த  40 ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 வயதை கடந்தவர்களிடம் மட்டுமே மது குடிக்கும்  பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மது  குடிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர்  பள்ளி மாணவிகள் மூன்று பேர் மது குடிப்பதுபோல் சமூக வலைத்தளங்களில் வீடியோ  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் ஜாலிக்காக இதுபோன்ற மதுவை  குடிப்பதாக கூறப்பட்டது,பார்வையாளர்களை அதிர வைத்தது.

கோர்ட்  உத்தரவிட்டும்மூடாதமதுக்கடைகள்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதே விபத்துக்கு காரணம் என்று  பல்வேறு  அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு  மார்ச் 31ம் தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 கடைகளும், மாநில  சாலைகளில் இருந்த 1500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும் மூடப்பட  வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதில் சொற்ப கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது வேதனை.

* இலக்கு என்ற பெயரில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி வருமானம்
* போதையில் தள்ளாடுகிறது சமுதாயம்
* தடம் மாறுகிறது இளைய தலைமுறை  

மது போதையால்  நேர்ந்த கொடூரங்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 3வயது குழந்தையை, மது குடிக்க வைத்து தாயே அடித்து உதைத்த கொடூரம் அரங்கேறியது. கடந்த ஆண்டின் இறுதியில் ஆந்திராவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவரை மதுபோதையில் பலாத்காரம் செய்த வாலிபர்கள், அவரது வாயிலும் மதுவை ஊற்றி மயங்க வைத்து, முகத்தை சிதைத்து கொன்று எரித்த சம்பவம் இதயங்களை பதறவைத்தது.   மதுரையில் திருவிழா காண அழைத்து வந்த சிறுமியை, மது போதையில் இருந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அவலம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்தது. சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12வயது மாற்றுத்திறனாளி சிறுமியை மயக்க மருந்து கொடுத்து, காவலாளி முதல் பிளம்பர்கள் வரை 17 பேர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதற்கு கண்ணை மறைத்த மது போதையே முக்கியகாரணம். கள்ளக்குறிச்சி மாதவன்சேரி கிராமத்தில் காதலிக்க மறுத்த மாணவியை, மதுபோதையில் இருந்த வாலிபர் ராஜூ, கிணற்றில் தள்ளிவிட்டு  கொலை செய்த கொடுமையும் கடந்தாண்டில் நடந்தது.

குடி நோயாளிகளை திருத்த ஏ.ஏ. அமைப்பு
உலகம் முழுவதும் குடிப்பழகத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க ஆல்கஹாலிக்  அனானிமஸ் (ஏஏ) அமைப்பு செயல்பட்டு வருகிறது. 1935ம் ஆண்டு நியூயார்க்கில் பில்  அண்ட் டாக்டர் பாப் இணைந்து  குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க  நடத்திய ஆலோசனையின் பேரில், இந்த அமைப்பு உருவானது.ஒவ்வொரு நாட்டிலும்  பள்ளிகள், சமுதாய கட்டிடங்களில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.  குடிபழக்கத்தால் பாதிக்கப்பட்டோர், தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி,  மற்ற குடிநோயாளிகளை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட செய்கின்றனர்.



Tags : men , Drunken, addicts, alcohol
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...